Thursday, August 23, 2007

பூஜ்யம்


(1997-ல் வெளிவந்த என்னுடைய ‘பூஜ்யம்’ என்ற கவிதைத் தொகுப்பிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சில கவிதைகள் மட்டும் ...)

வாசனை

கவிதையின் வாசனை குறித்து
சில சங்கற்பங்கள் இருந்ததெனக்கு.
சிறு வயசில் ரோட்டோர மணல்மேட்டில்
ட்ராயர் மட்டும் போட்ட ட்ரைவராய்
ஓட்டிய செங்கல் பஸ்
தானே பாதை கிழித்து மலை ஏறுகையில்
முந்தின இரவு யாரோ பெய்து மூடிவைத்த
மூத்திரத்தின் ஈரத்தையும் கிளறிவிட்டு ஓடி நிற்க
அந்த மூத்திர வாசனை இதை எழுதுகையில்
கிளர்ந்தெழும் நாசியில்.

ஏதோ ஓர் உதயத்தில் கேஎஸ்ஆர்டிசி பஸ்ஸில்
உறக்கத்திலிருந்து விழித்து
குந்நங்குளம் கடப்பதை உணர்கையில்
முன்சீட்டு பர்தா பெண்ணின்

துபாய் சென்ட் வாசனை இதை எழுதுகையில்
முல்லைப்பூவாய் மலரும்.
இப்படியாக,
இந்த உதாரணக் கவிதைக்கே
மூத்திர வாசனையா முல்லையின் வாசனையா
என உணர முடியாமல்
கவிதையின் வாசனைச் சங்கற்பங்கள் குறித்ததான
ஒரு சந்தேகம் மனதில் எழ,
பொது நூலகத்தின்
புத்தகஅடுக்குகளின் இடுக்குகளிலிருந்து
கிளம்பிய அந்த வாசனை
என் சந்தேகம் தீர்த்தது.


ஆறுதல் பரிசு

எறும்பு தின்னிகள் மிகவும் சாதுவானவை.
ரொம்ப நல்லவை.

பசிக்கிற நேரம்
கொஞ்சம் எறும்புகளை மட்டும் விழுங்கி
அவை பாட்டுக்கு ஊர்ந்து கொண்டிருக்கும்.

எப்பொழுதாவது முட்டையும்
கொஞ்சம் பாலும்
கிடைத்தால் மிக உசிதம்.

முகத்தின் அருகே மெதுவாய் நகரும்
நிலமே உலகம்.
அவ்வப்போது மூக்கில் கொஞ்சம் மண்

ஒட்டிக்கொள்ளும்.

அதனாலென்ன, பரவாயில்லை.
பதிக்கிற சிறு காற்சுவடுகளை
திரும்பிப் பார்ப்பது இல்லை.
அடுத்து வைக்கப் போகும் சுவட்டை

எண்ணிப் பார்ப்பதும் இல்லை.

எனக்கு உங்களைப் பிடித்திருக்கிறது
என்றவளே,
என்னைப் போலவே ஒரு எறும்பு தின்னியைப்
பரிசாய்த் தருகிறேன்.
படுக்கைக்கருகில் வைத்துக்கொள்.


காற்று

சந்தோஷ துக்க மனநிலைக்கொப்ப
உருவம் மாறும் முகிற்பஞ்சு.
(ஒரு சமயம் இந்திரா காந்தி கூட
மிதந்து கொண்டிருந்ததாய் ஞாபகம்)
அப்படியொன்றும் ஆழமில்லை
அடுத்தவர் மனது
- ஆணாகிலும் பெண்ணாகிலும்.
எனவே உன் மனநிலைக்கொப்பவும்
உருவம் மாறும் முகிற்பஞ்சு.
அந்தப் பொட்டல் வெளியில்
நாம் நின்றிருக்கையில்
காமத்தைக் கிளறிவிட்டுப்போன குளிர்காற்று
ழையை மலையாளத்துக்குக் கடத்தியது.
முகில்களுக்குப் பாவம் எலும்பும்
தசைகளுமில்லை.
நம் முன்
வேறோர் உருவத்தைக் காட்டிவிட்டு
நகர்ந்து கொண்டிருக்கின்றன.
முத்தத்திலோ முயங்குதலிலோ
காமம் தீர்ந்து விடுகிறதா என்று கேட்டாய்.
பின், கையை விடுவித்துக் கொண்டு நகர்ந்தாய்.
நெடுந்தூரம் சென்று திரும்பி நின்று கூவினாய்:
‘காத்திரு. ஒரு நாள் நானும் அகப்படுவேன்.’
இந்த நகரத்தின் இரைச்சலினூடே
நுழைந்து ஊர்ந்து போகையில்
இன்றும் சிலசமயம் நான்
வானத்தைப் பார்ப்பதுண்டு.


கனாவெளியில்

கனவு ஒரு மதுக்கோப்பை.
அதன் நுனியில் ததும்பி நிற்கும்
இன்னும் வழியாமல் என் கருணை.

கனவு ஒரு சமுத்திரம்.
நிகழ்வுத் துகள்களை அரித்துப் பின்வாங்கும்
இன்னும் ஓயாமல் என் பற்று.

கனவு ஒரு தாய்.
கருப்புகுந்து பலநாள் உறிஞ்சியுண்டு வெளிப்பிதுங்கும்
இன்னும் இறவாமல் என் நினைவு.

கனவு ஒரு நித்திரை.
புலனடங்கிய அனந்தப் பெருவெளியிலெங்கோ
கிடந்து நெளியும்இன்னும் உறங்காமல் என் உயிர்.


கால அவஸ்தை

காற்றின் குளுமை இமைகளில் ஏறுகிறது.
எரிச்சல் மிகுந்துவிட்ட மேனியின் வெம்மையை
ஒத்தி எடுக்கிறது காற்று.
சிலபோது பலமாய் வீசி
கண்ணில் மண் தூவுகிறது.
அந்தக் கிளையில் குருவி
அஞ்சி அமர்ந்து இருப்பது
வெயிலாலா காற்றாலா?
நகரத்தின் இந்த இடுக்கில்
இப்படி ஓர் அமைதி வழிவது
ஆச்சர்யம்.
அல்லது
சப்தங்கள் காதில் ஏற்காத
ஒரு மோன நிலையில்
நானும் குருவியும் இந்தச் சூழலும்
அமர்ந்திருக்கிறோம்.
இருட்ட இன்னும் நேரமிருக்கிறது.
ஆனால்
மழை வரும் போலவும் இருக்கிறது.
குருவீ,
கூட்டுக்குப் போயிரு.


கரு

வேப்பர் விளக்குகளின்
மஞ்சள் வெளிச்சத்தில்
நாம் நடந்து கொண்டிருந்தோம்.
மௌனத்தின் சப்தம்
நமக்கிடையேயான இடைவெளியை
நிரப்பிக் கொண்டிருந்தது.
கைகள் கோர்த்து நடந்தால்தானா
காதல்?
இந்தச் சுதந்திரத்தின் ஆயுளைப் பற்றிய பயம்
வந்திருக்க வேண்டும் உனக்கு.
சட்டென்று கையைப் பற்றிக்கொண்டாய்.
மனம் வெளியே வந்து விழுந்தது.
நீர்த்துக் கொண்டிருந்தது போக்கு வரத்து.
பஸ் நிறுத்தத்தில் கடைசி பஸ்ஸுக்காய்
காத்திருந்த நாலைந்து பேர்
இருப்புக் கொள்ளாமல்
நடக்கவும் நிற்கவும் தலைப்பட்டார்கள்.
நிழற்குடை விடுத்து
கைப்பிடிச் சுவரோரம் நின்றோம்.
எங்கேயோ பார்ப்பதுபோல் திரும்பி
நொடிப்பொழுது நம் முகத்தைக்
கூர்ந்து பார்க்கிறார்கள் அவர்கள்.
நீ
வழக்கத்துக்கு மாறாய்
என் தோளில் தலைசாய்த்துக் கொண்டாய்.
இனிமேல்
காதலைப் பற்றிய கவிதைகள்
எழுத வேண்டியதில்லை என்று
தோன்றியது எனக்கு.


நிறத்தை நுகர்

ஊதாப் பூக்களெல்லாமொரே நிறத்தனவா அவை
மீதாய்ப் பறக்கின்ற தேனீக்களொரே நிறத்தனவா
என்னுடன் மலர் பறிக்க வந்தபோதெலாமுன்னிறம்
பறித்து நான் நின்றதனைக் கண்டதுண்டோ நீ
எனக்கீந்த மலரையாவுன் குழல் சூடிற்றெனவெண்ணினாய்
நான் சூட்டியது நிறத்தை
கறுப்புஞ்செம்மஞ்சளுஞ்சிவப்புங்
குழலாய் முகமாயிதழாய் ஜ்வலிக்கவுனக்கு
நானீந்தவூதா
வானங்கறுப்பானவுடன் வாடிவிட்டாலுமதன்
நிறத்தை நானின்னும்
நுகர்கிறேனுன்னிதழ்களையுமென்
மகரந்தக்குழலினையும்
பரஸ்பரமறிந்துகொண்டோமின்னுமுன்னிறத்தை
நானுமென்னிறத்தை நீயுமற்த்து கொண்டோமா
இனியறிவோமென்னுள்ளூதாவையுன் முடியில்
சூட்டிவிட்டேனுன்னுள்ளென்ன
ஊதாவா நீலமா பச்சையா மஞ்சளா
நிறமற்றவொரு நிறமாவெதுவாயினுமதைப் பேசு
என்னிடமல்ல உன்னிடம்
நானும் நீயும் பேசுவதை விட
எனக்குள்ளிருக்கும் நீயும் உனக்குள்ளிருக்கும் நானும்
பேசுவோம்
பிறகே தெரியும் நம் காதலின் நிறம் ஊதாவா
நிறமற்றவொரு நிறமாவென.


கேப்ஸ்யூல் கவிதைகள்

* அடங்காமல் திரிகின்றன பசித்த பசுக்கள்
புல்லுக்கு அடியில் பூத்திருக்கின்றன
சில கவிதைகளும்.

* கலைப்பதில்லை கனவுகளை வாலிபனின்
வெப்பத்தைத் தணித்துவிட்டு வெளியேறி
வேட்டியில் ஒட்டிக்கொண்ட
நாளைய வாரிசுகள்.

* உலகமொரு கிராமமாச்சு
வீடு மட்டும் தூரமாச்சு
உணர்வுகளால் ஆனதன்றோ
உறவுகளின் இன்டர்நெட்.

* நேற்று என்பது விளங்கி விட்டது; சுவை அதிகம்.
நாளை என்பது அர்த்தம் நிறைந்தது; கடினம்.
இன்று என்பது நேற்றைய நாளை.


சிரிபதியும் சிரிதேவியும்

சிரிதேவிக்கு வயதில்லை
எந்த வயதிலும் அவளை
அவளென்றே அழைக்கலாம்
எந்த ஒரு கிராமத்துக் குட்டிக்கும் குறியீடு அவள்
ஆத்து நீர் சலசலப்பிலும் தென்னோலை சரசரப்பிலும்
அவள் சிரிப்பை உணரலாம்
தாவணி நழுவிய ரவிக்கைப் பரிமாணங்களில்
சோளச்சோறு கம்பங்கூழ்
ஊட்டத்தை அறியலாம்
மஞ்சக் குளிச்சு அள்ளி முடிச்சு
மெட்டி ஒலிக்க மெல்லச் சிரிச்சுப் போகும்
அவளின் அலைபாயும் கண்களில்
வாலிபக் கள்ளத்தைத் தேடலாம்
பேரிளம்பெண் பருவத்திலும்
பாவாடை தாவணி அவளுக்குப்
பொருத்தமாகத்தான் இருக்கும்
அந்த கிராமத்து நாட்களில்
விடலைப் பருவத்தில் ரசித்து வியக்
எனக்கும்
கறுப்பாய் ஒரு
சிரிதேவி இருந்தாள்.


உன் கல்லறைக்கு வருவது எப்படி?
(ஸ்ரீபதி பத்மநாபாவுக்கு)

நடந்து வராதே.
பறந்து வா - அல்லது
நீந்தி வா.

கொடுத்த சத்தியங்களை
முடித்துக் கொடுத்துவிட்டு வா - அல்லது
திருப்பிக் கொடுத்துவிட்டு வா.

வெற்றுடம்புடன் வா.
சட்டை போட்டு வந்தால்
சட்டைப் பைக்குள் ஏதேனும் கவிதைத் தாள்கள்
மிஞ்சியிருக்கக் கூடும்.

ஏதேனும் லட்சியமிருந்தால்
அடைந்துவிட்டு வா- அல்லது
மறந்து விட்டு வா.
இங்கிருந்து திரும்பிச் செல்ல
உனக்கு அனுமதியில்லை.

திறமைகள் ஏதேனும் இருந்தால்
சந்ததிகளுக்குப்
பகிர்ந்து கொடுத்து விட்டு
வராதே.
தங்கள் சித்திகளை
அவர்களே தேடிக் கொள்வார்கள்.

சமூகத்திடம் கேள்விகள் ஏதேனும் மீதமிருந்தால்
விட்டுவிட்டு வா.
இதுவரை அறிந்த பதில்கள் போதுமானவை.

முடிந்தால் யாரேனும்
ஒருவரைக் காதலித்துவிட்டு வா.
ஒருவரிடம் பாசத்தைக் கொட்டிவிட்டு வா.
ஒருவருடன் நட்புக்கொண்டு விட்டு வா.

இறுதியாக,
தனியாக வராதே.
உன்னைப் போல்

ஓரிருவரை
அழைத்து வா.

2 comments:

சிவசுப்பிரமணியன் said...

வாசனை - சுகந்தம்

ஆறுதல் பரிசு - அருமையான ஒப்பீடு

கனா வெளியில்
//கனவு ஒரு நித்திரை.
புலனடங்கிய அனந்தப் பெருவெளியிலெங்கோ
கிடந்து நெளியும்இன்னும் உறங்காமல் என் உயிர்//
அருமையான வரிகள்


கால அவஸ்தை - ஆழம் அதிகம்

//நீ
வழக்கத்துக்கு மாறாய்
என் தோளில் தலைசாய்த்துக் கொண்டாய்.
இனிமேல்
காதலைப் பற்றிய கவிதைகள்
எழுத வேண்டியதில்லை என்று
தோன்றியது எனக்கு.//

அடா அடா அடா இயல்பான அழகு மிக்க வரிகள்

சிரிபதியும் சிரிதேவியும் - என் பழைய ஞயாபகங்கள்

கல்லறை கவிதை - காலத்தின் அழைப்புகள்

govind said...

migap perumayai irukkiradhu,indha kavithaikalai acchil varuvaruvatharkku mun,internetil publish avadharku mun, padithavan enru...

andru rasitha ade unarvu..idhamana eveningle.. namma nair kadiyila tea kudichu, oru tham potta madhiru...